வெளிநாடுகளில் இருந்து, வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயம் விலை குறைந்தது – கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை

0
91
வெங்காய விளைச்சல் குறைந்ததாலும், மழை பாதிப்பாலும் வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது.
கோவை நகருக்கு கர்நாடகம், மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் லாரிகளில் வருவது வழக்கம். ஆனால் வெங்காய வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது.. தற்போது எகிப்து, ஈரான், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம், மராட்டிய மாநிலத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து கோவை உள்பட பல்வேறு நகரங்களுக்கு லாரிகளில் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.
கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு கடந்த 2 நாட்களாக 1100 டன் பெரிய வெங்காயம் வந்தது. நேற்று மட்டும் 200 டன் பெரிய வெங்காயம் வந்தது.
இது குறித்து கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் எம்.ராஜேந்திரன் கூறியதாவது:-
கோவைக்கு வெங்காய வரத்து அதிகரித்து இருப்பதால் விலை குறைய தொடங்கி உள்ளது. நல்ல ரக வெங்காயம் கிலோ ரூ.90-க்கும், 2-ம் ரக, 3-ம் ரக வெங்காயம் கிலோ ரூ.70 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயவிலை குறைய தொடங்கினாலும் விற்பனை மந்தமாகத் தான் உள்ளது. வெங்காய விளைச்சல் உள்ள மாநிலங்களில் ஜனவரி மாதம் அறுவடை செய்ய வேண்டிய வெங்காயத்தை ஒரு மாதம் முன்கூட்டியே அறுவடை செய்ய தொடங்கி உள்ளனர். இதுவும் விலைகுறைய காரணம் ஆகும்.
எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. எகிப்து நாட்டில் இருந்து வந்துள்ள வெங்காயம் ஒன்று 600 கிராம் எடை உள்ளது. வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் குறையும். சின்ன வெங்காயம் நேற்று கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
வரத்து அதிகரித்து உள்ளதால் பெரிய வெங்காயம் விலை குறைய தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.