சுவர் இடிந்து 17 பேர் பலி: பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் – கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி

0
100
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி.காலனியில் ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் வீட்டின் தடுப்புச்சுவர் இடிந்து வீடுகளின் மீது விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்தை பார்வையிடுவதற்காக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று நடூர் காலனிக்கு வந்தார்.
அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் இதுவரை கேள்விப்படாத ஒன்றாகும். தடுப்புச்சுவர் அருகே வசிப்பவர்கள், இந்த சுவர் கட்டியுள்ள விதம் எங்களுக்கு பயமாக உள்ளது, மேலும் மழைக்காலங்களில் வீட்டிலிருந்து தண்ணீர் வருகிறது என்று உண்மை நிலையை எடுத்துக் கூறியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது. பொதுமக்கள் புகார் கூறியபோதே, உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அரசு தரப்பில் அளிக்கவேண்டிய நிவாரணங்களை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அதே இடத்திலோ அல்லது மாற்று இடத்திலோ உடனடியாக வீடுகளை கட்டும் பணியை தொடங்க வேண்டும்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இதேபோல் தமிழகத்தில் பாதுகாப்பில்லாமல் உள்ள சுற்றுச்சுவர்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், நகர செயலாளர் திருமூர்த்தி, இளைஞரணி செயலாளர் சம்பத்குமார், பொருளாளர் பரமசிவம், தனபால், வைரவேல், பிரேம் பெரியசாமி, மகளிரணி தமிழ்ச்செல்வி, உள்பட பலர் இருந்தனர்.
இதேபோல் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழக நிறுவனரும் தலைவருமான இப்ராஹிம் பாதுஷா நேற்று ஏ.டி.காலனி வந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் கோவை மாவட்ட அமைப்பாளர் முகமது ரபிக், பொதுச் செயலாளர் சார்லஸ் அந்தோணி, தலைமை நிலைய செயலாளர் நாகேஸ்வரன் உள்பட பலர் இருந்தனர்.