பலத்த மழை:- 15 அடி உயர சுவர் சாய்ந்து விழுந்ததில் – வீடுகள் இடிந்து 17 பேர் பலி

0
100

கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகள் ஈரப்பதத்துடன் உள்ளன. இ்ந்தநிலையில் மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை விடிய,விடிய பலத்த மழை பெய்தது.

ஒரே நாள் இரவில் 18 சென்டிமீட்டர் மழை கொட்டிதீர்த்தது. இதனால் மேட்டுப்பாளையம் முழுவதும் வெள்ளக்காடானது.
மேட்டு்ப்பாளையம் நடூர் ஏ.டி.காலனியில் ஏராளமானோர் குடியிருந்து வருகிறார்கள். இங்கு வரிசையாக ஓட்டு வீடுகள் உள்ளன.
குடியிருப்புகளுக்கு அருகில் மேட்டுப்பாளையத்தில் சக்கரவர்த்தி என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வரும் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் என்பவரது பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டின் 15 அடி உயர தடுப்பு சுவர் மழையின் காரணமாக ஈரப்பதத்துடன் இருந்தது.
பலத்த மழை காரணமாக மேடான பகுதியில் இருந்து மழைநீர் குடியிருப்பை நோக்கி பெருக்கெடுத்து வந்தது. அப்போது வீடுகளுக்குள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.
மழையால் ஏற்கனவே ஈரப்பதத்துடன் இருந்த அந்த 15 அடி உயர சுவர், வெள்ள நீர் சூழ்ந்ததால், அதிகாலை 3.30 மணியளவில் திடீரென்று சாய்ந்து, அருகில் இருந்த ஓட்டு வீடுகள் மீது விழுந்து அமுக்கியது.
இதனால் அந்த வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகளில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள், தங்களை காப்பாற்றக்கோரி கூக்குரல் எழுப்புவதற்குள் இடிபாடுகளுக்குள் சிக்கி புதைந்தனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடியவர்கள் வெளியே வரமுடியாததால் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய தகவல் தெரியவந்ததும் மேட்டுப்பாளையம் போலீசாரும், தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் வரவழைக்கப்பட்டு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தோண்ட, தோண்ட இறந்தவர்களின் உடல்கள் வெளியே வந்தன. கொட்டும் மழையிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்தது. விபத்தில் பலியான 17 பேரின் உடல்களும் நீண்ட நேரத்துக்கு பின்னர் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
பலியானவர்களில் 11 பெண்களும், 3 ஆண்களும், 3 குழந்தைகளும் ஆவார்கள்.
இறந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1.ஆனந்தகுமார்(வயது45).
2.நதியா(30), ஆனந்தகுமாரின் மனைவி.
3.அக்சயா(7).
4.லோகுராம்(7).
(ஆனந்தகுமாரின் குழந்தைகள்)
5.ஹரிசுதா(வயது16),
6.மகாலட்சுமி(10),
(பண்ணாரி என்பவருடைய மகள்கள்)
7.சிவகாமி(45), கணவர் பழனிசாமி.
8. ஓவியம்மாள்(50), கணவர் ராமசாமி,
9.வைதேகி(20), கணவர் பழனிசாமி.
10.திலகவதி(50), கணவர் ஈஸ்வரன்.
11,அருக்காணி(55),
12.ருக்மணி(40),
13,நிவேதா(18), தந்தை பெயர் செல்வம்.
14. சின்னம்மாள்(70), கணவர் ரங்கநாதன்.
15. மங்களம்மாள்(60), கணவர் வீரபத்திரன்.
16.குருசாமி(45), மாரிமுத்து என்பவருடைய மகன்.
17. ராமநாதன்(20), தந்தை செல்வராஜ்.
3 குடும்பத்தை சேர்ந்த 17 பேர் பலியான தகவல் கிடைத்ததும் அவர்களது உறவினர்கள், அக்கம் பக்கத்து கிராம மக்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். அதிலும் குழந்தைகளின் உடல்களை பார்த்து அங்கிருந்தவர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக அமைந்தது.
மீட்கப்பட்ட உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலியானவர்களின் உறவினர்கள் திரண்டு இருந்ததால் ஆஸ்பத்திரி முழுவதும் கூட்டம் அலைமோதியது.
வீடுகள் இடிந்த இடத்தை கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி கார்த்திகயேன், மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரைமுருகன், ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பலியானவர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.
தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தையொட்டி, ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுவது, பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை தேடி வருகிறார்கள்.
3 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் இறந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.