பொள்ளாச்சி நகரில் அனுமதி பெறாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை – நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

0
106

சென்னையில் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் என்ஜினீயர் சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள் சார்பில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை நகரமைப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து நகராட்சி கமிஷனர் கண்ணன் கூறியதாவது:-

நகராட்சி பகுதிகளில் பேனர்கள் வைத்து விளம்பரங்கள் செய்வதற்கு மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற வேண்டும். பேனர் வைக்கப்பட வேண்டிய இடத்தின் நில உரிமையாளரிடம் மற்றும் அந்தந்த பகுதி போலீசாரின் தடையின்மை சான்று பெற வேண்டும். வைக்கப்படும் 2 பேனர்களின் இடையில் 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், ஆஸ்பத்திரிகள், புராதன சின்னங்கள், சிலைகள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பேனர் வைக்க கூடாது. அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்களின் அனுமதி ரத்து செய்யவும், அதை அகற்றுவது மட்டுமல்லாது அதற்கான வைப்பு தொகையையும் இழக்க நேரிடும்.

பொள்ளாச்சி நகரில் தேர்நிலை, பாலக்காடு ரோட்டில் வடுகபாளையம் பிரிவு, பல்லடம் ரோட்டில் சாந்தி மருத்துவமனை அருகில், கோவை ரோட்டில் சி.டி.சி. டெப்போ அருகில், கோட்டூர் ரோட்டில் பஸ் நிறுத்தத்திற்கு தென்புறம், ஜோதிநகர் செல்லும் 80 அடி ரோடு, தென்வடல் ராஜாமில் ரோட்டில் கீழ்புறம் உள்ள காலியிடம் ஆகிய இடங்களில் பேனர்களை வைத்து கொள்ளலாம். நகராட்சி அலுவலகம் முன், பழைய, கூடுதல் பஸ் நிலையம் முன், அரசு கட்டிடங்கள், காந்தி சிலை அருகில், உடுமலை ரோடு பழைய பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், பஸ் நிறுத்தங்கள், பயணிகள் நிழற்குடை, கல்வி நிறுவனங்கள் அருகில் வைக்க கூடாது.

இதேபோன்று சாலை தடுப்புகள், அரசு கட்டிடங்கள், பழைய மற்றும் கூடுதல் பஸ் நிலையங்கள் உள்ளிட்டவைகளில் சுவரொட்டிகள் ஒட்ட கூடாது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர்களை வைக்க கூடாது. பொள்ளாச்சி நகரில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் முற்றிலும் அகற்றப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் முறையான அனுமதி பெறாமல் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டால் விளம்பரம் செய்யும் நிறுவனம் மற்றும் அதை தயார் செய்யும் நிறுவனம் ஆகியவற்றின் மீது போலீசில் புகார் தெரிவித்து சட்டரீதியாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.