கோவை அருகே ரூ.7,500-க்கு விற்கப்பட்ட ஆண் குழந்தை மீட்பு – எடை குறைவாக இருப்பதால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

0
105

கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத 22 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தார். அந்த பெண்ணுக்கு சூலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 6-ந் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிரசவத்தின்போது குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை, அவருடைய சகோதரியின் கணவரான ஆனந்தராஜ், சொந்த ஊரான நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். அந்த பச்சிளம் குழந்தையை தனது வீட்டுக்கு கொண்டு சென்றார்.
பின்னர் அவர், தனது வீட்டின் அருகே வசிக்கும் ராஜன்-செல்வி தம்பதிக்கு ரூ.7,500-க்கு அந்த குழந்தையை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அந்த தம்பதி திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையத்தில் வசிக்கும் தங்களது உறவினரான மணிமேகலை என்பவரிடம் குழந்தையை கொடுத்து வளர்த்து வருவது தெரியவந்தது.
இதை அறிந்த கோவை உக்கடம் டான் போஸ்கோ அன்பு இல்லம் வளாகத்தில் உள்ள சைல்ட் லைன் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் உமாதேவி, ஆலோசகர் ஜோசப் ரகுமான் கென்னடி மற்றும் களப்பணியாளர் கிருஷ்ணகுமாரி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அவர்கள் இது பற்றி குழந்தையை வளர்த்தவர்களிடம் விசாரித்தனர். இதில் இறந்த பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு அனுப்ப பணம் இல்லாததால் குழந்தையை ரூ.7500-க்கு விற்றது தெரியவந்தது.
இதையடுத்து கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் மற்றும் சைல்டு லைன் அலுவலர்கள் ஆகியோர் ஆனந்தராஜ் மற்றும் ராஜன்- செல்வி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து சூலூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று குழந்தை கொண்டு வரப்பட்டது. அதை போலீசார் மீட்டனர்.
பின்னர் சைல்ட் லைன் ஆலோசகர் ஜோசப் ரகுமான் கென்னடி கூறுகையில்,
குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மீட்கப்பட்ட குழந்தை 1.90 கிலோ எடை இருந்தது. குழந்தையின் எடை குறைவாக இருப்பதால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான நிலையை அடைந்த பிறகு குழந்தை, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்றார்.