தமிழக-கேரள எல்லையில் உள்ளது கிண்ணக்கொரை. இது மஞ்சூரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கிடையில் மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரையில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு நேற்று முன்தினம் காலையில் இரும்பு தளவாடங்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. அந்த சாலை 20-க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட குறுகிய மலைப்பாதை ஆகும்.
இந்த நிலையில் மதியம் 1 மணியளவில் கேரிங்டன் என்ற இடத்தில் சென்றபோது திடீரென லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சாலையின் இருபுறமும் அரசு பஸ்கள் உள்பட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
நீண்ட நேரம் ஆகியும் பழுதான லாரி அப்புறப்படுத்தப்படாததால், அரசு பஸ்களில் இருந்து பயணிகள் கீழே இறங்கி தங்களது ஊர்களுக்கு நடந்து சென்றனர். மேலும் சிலர் தனியார் வாகனங்களில் ஏறி சென்றனர். இதற்கிடையில் கிண்ணக்கொரை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு சொந்தமான மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு, பழுதடைந்த லாரியில் இருந்த இரும்பு தளவாடங்களை மாற்றி கொண்டு செல்லப்பட்டது.
அதன்பின்னர் நடுரோட்டில் நின்ற லாரியில் பழுது நீக்கப்பட்டது. அதன்பின்னர் இரவு 10 மணிக்கு அந்த வழியே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
மஞ்சூர்-கிண்ணக்கொரை இடையே 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்தனர்.
எனவே அங்குள்ள கொண்டை ஊசி வளைவுகளை அகலப்படுத்த வேண்டும் என்று அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.