கோவை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்- அமைச்சர் வருகை
தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் சென்று விட்டு நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக நேற்று மாலை விமானம் மூலம் கோவை வந்தார்.
அவரை வரவேற்கும் விதமாக அவினாசி சாலையில் இருந்து விமான நிலையம் வரை உள்ள சாலையின் இரண்டு புறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சென்டை மேளம், தாரை தப்பட்டை முழங்க விமானநிலையம் விழாக் கோலம் பூண்டிருந்தது மேலும் விமானநிலையம் செல்லும் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. கொடிகள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
உற்சாக வரவேற்பு
முதல்-அமைச்சர் வந்த விமானம் மாலை 6.30 மணிக்கு கோவையில் தரையிறங்கியது. அவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுகுட்டி, ஒ.கே.சின்னராஜ், கஸ்தூரிவாசு, முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி.அப்துல் ஜப்பார், கோவை மாவட்ட பால்வளத் தலைவர் கே.பி.ராஜூ, முன்னாள் எம்.பி.க்கள் மகேந்திரன், எம்.தியாகராஜன் மற்றும் வால்பாறை அமீது, சின்னவேடம்பட்டி சுப்பையன், மாரியப்பன், வெள்ளலூர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு முதல்- அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
சேலம் புறப்பட்டு சென்றார்
இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டார்.. அவரது கார் விமான நிலையத்தில் இருந்து அவினாசி சாலை வரை மெதுவாக வந்தது. அப்போது வழிநெடுகிலும் இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் அவருக்கு சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார். அவருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் விமானத்தில் வந்திருந்தார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.