கோவை சிங்காநல்லூர்-வெள்ளலூர் ரோட்டில் விற்பனைக்காக வைத்திருந்த 29 கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வனத்துறைக்கு தகவல்
சுதந்திரமாக பறந்து செல்லும் கிளிகளை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று வனத்துறை உத்தரவிட்டு உள்ளது. எனவே வீடுகளில் கிளிகளை வளர்ப்பது தெரியவந்தால் அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர்-வெள்ளலூர் ரோட்டில் கிளிகளின் இறக்கைகளை துண்டித்து அவற்றை விற்பனைக்காக வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
29 கிளிகள் பறிமுதல்
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 பேர் ஒரு அட்டை பெட்டியில் 29 கிளிகளை அடைத்து விற்பனைக்காக வைத்து இருந்தனர்.
உடனே அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவை அனைத்தும் கோவை கோட்ட வனத்துறை அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இது குறித்து மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் கூறியதாவது:-
வெட்டப்பட்ட இறக்கைகள்
கிளிகளை வீடுகளில் வளர்க்கக்கூடாது என்பது பலருக்கு தெரிவது இல்லை. இது தெரியாமல் ரோட்டின் ஓரத்தில் வைத்து விற்பனை செய்பவர்களிடம் இருந்து கிளிகளை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து அதன் இறக்கைகளை வெட்டி கூண்டில் அடைத்து வைத்து வளர்க்கிறார்கள்.
வெளியே சுதந்திரமாக சுற்றித்திரியும் பறவையை துன்பப்படுத்தி இறக்கைகளை வெட்டி கூண்டில் அடைத்து வளர்ப்பது குற்றம் ஆகும். கோவையில் விற்பனைக்காக வைத்து இருந்த 29 கிளிகளை பறிமுதல் செய்து உள்ளோம். அதன் இறக்கைகள் வெட்டப்பட்டு அலகுகள் லேசாக துண்டிக்கப்பட்டு உள்ளது.
கடும் நடவடிக்கை
சில கிளிகளின் வாலும் வெட்டப்பட்டு உள்ளது. எனவே அவை மீண்டும் வளருவதற்காக வனத்துறை அலுவலகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அவை வளர்ந்ததும் விடுவிக்கப்படும்.
இந்த கிளிகளை விற்பனைக்காக வைத்து இருந்தவர்கள் தங்களுக்கு அதை விற்பனை செய்யக்கூடாது என்பது தெரியாது என்று கூறியதால் அவர்கள் எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டனர். ஒரே நபர் மீண்டும் மீண்டும் கிளிகளை விற்பனை செய்து பிடிபட்டால் அவர் மீது வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.