அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் புதிதாக 50 நவீன பஸ்கள் இயக்க முடிவு – அதிகாரிகள் தகவல்

0
99

அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 கோட்டங்கள் உள்ளன. இதன் மூலம் 1700-க்கும் மேற்பட்ட வெளியூர் பஸ்களும், 715 டவுன் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இவைகளில் பெரும்பாலான பஸ்கள் காலாவதியானதால் மாற்றப்பட்டு வருகின்றன.

தற்போது வரை 800 பஸ்கள் புதிதாக வழங்கப்பட்டு உள்ளன. கோவை மாநகர பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டம் சார்பில் 200 பஸ்கள் விடப்பட்டன. அதில் தானியங்கி படிக்கட்டுகள், டிஜிட்டல் அறிவிப்பு பலகை, நவீன இருக்கைகள் உள்பட பல்வேறு வசதிகள் இருந்தன.

இதில் பல பஸ்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இயக்கப்பட்டு வரும் சிவப்பு நிற நவீன பஸ்கள் போன்று கோவையிலும் முதற்கட்டமாக புதிதாக 50 நவீன பஸ்கள் இயக்கப்படுகிறது. அந்த பஸ்களை வடிவமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாநகரில் தனியார் பஸ்களில் பல்வேறு வசதிகள் இருப்பதால் பயணிகள் விரும்பி பயணம் செய்கிறார்கள். எனவே அரசு சார்பில் இயக்கப்படும் பஸ்களிலும் நவீன வசதிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக 50 நவீன டவுன்பஸ்கள் விரைவில் கோவைக்கு வர உள்ளன. அதில் 10 பஸ்கள் வந்து உள்ளது. அதில் தானியங்கி கதவு, அவசர கால வழி, சென்சார் வசதி, தீயணைப்பு கருவி, தரமான இருக்கைகள், எல்.இ.டி. விளக்குகள் உள்பட நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்யும்போது பிடிப்பதற்காக தனி வசதி செய்யப்பட்டு உள்ளது. திடீரென்று பிரேக் போடும்போது பயணிகள் இருக்கையில் மோதுவதை தடுக்கவும் சிறப்பு வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நவீன டவுன் பஸ்கள் தொடக்க விழா விரைவில் நடக்க உள்ளது. இதில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.11 ஆகும். ஏற்கனவே மாநகரில் 200 மிதவை பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் மோசமாக உள்ள 50 பஸ்களுக்கு பதிலாக சிவப்பு நிற நவீன பஸ்கள் இயக்கப்படும். அந்த எண்ணிக்கை பின்னர் படிப்படியாக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.