வால்பாறை நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சி ஆணையாளர் (பொ) சரவணபாபு உத்தரவின் பேரில் நகராட்சி துப்புரவு அதிகாரி ஜான்சன் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட பரப்பரையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய இரண்டு கடைக்காரர்களுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கடைகளிலிருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- அனைத்து கடைகளிலும் இங்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவது இல்லை என்பதை உறுதி செய்து அறிவிப்பு பலகைகள் வைக்கவேண்டும். வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க கடைகளுக்கு வரும் போது துணிப்பைகளை கொண்டுவரவேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களை அனைத்து கடைகளிலும், வியாபார ஸ்தலங்களிலும் வைக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.