ஆனைமலை வனப்பகுதியில், முயல், முள்ளம்பன்றி வேட்டையாடிய 5 பேர் கைது

0
88

ஆனைமலையை அடுத்த பெரியசோலை வேட்டைத்தடுப்பு முகாம் பகுதியில் சிலர் வன விலங்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில், வனவர் பிரபாகரன், வனக்காப்பாளர்கள் சபரிநாதன், கதிர்வேல், வேட்டைத்தடுப்பு காவலர்கள் காளிதாஸ், சாமியப்பன், ராஜன், கணபதி, கன்னியப்பன் ஆகியோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மங்கரை வனப்பகுதியை அடுத்த ஒட்டக்கரடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். இதில் இறந்த நிலையில் முயல், முள்ளம்பன்றி இறைச்சி இருந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன் (வயது 31), முத்துசாமி மகன் தினகராஜ் (32), தங்கவேல் மகன் காமாட்சி சுந்தரம் (32), ஆறுச்சாமி மகன் செல்வகுமார் (31), பொங்காளியூரைச் சேர்ந்த தங்கவேல் மகன் பழனிசாமி (47) என்பது தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் சேர்ந்து இரவு வனப்பகுதிக்குள் சென்று வலை மற்றும் வெளிச்சத்துடன் முயல் போன்ற ஒலி எழுப்பும் கருவி ஆகியவற்றின் மூலம் முயல், முள்ளம்பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்ய கொண்டுவந்தது தெரியவந்தது.
அதன்பிறகு முயல் மற்றும் முள்ளம்பன்றி இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடியதாக 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், வலை, வெளிச்சத்துடன் ஒலி எழுப்பும் கருவி, டார்ச்லைட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன். கைது செய்யப்பட்ட 5 பேரும் பொள்ளாச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதான 5 பேர் அளித்த வாக்குமூலத்தில், வனப்பகுதியில் முயலை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து சாப்பிடுவோம். மேலும் முயல் இறைச்சியை சிலருக்கு தொடர்ந்து விற்பனை செய்து வந்தோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் யார் யாருக்கு முயல் இறைச்சியை விற்பனை செய்தனர் என்பது குறித்தும், வேறு ஏேதனும் ஓட்டலுக்கு விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.