கழிவுநீர் அதிகமாக கலப்பதால் பச்சை நிறமாக மாறிய வாலாங்குளம் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி

0
78

கோவை மாநகர பகுதியில் வாலாங்குளம் உள்பட 8 குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் எப்போதும் தண்ணீர் இருந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர முக்கிய காரணமாக இந்த குளங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகி, கோவை, திருப்பூர் வழியாக சென்று காவிரியில் கலக்கும் நொய்யல் ஆறுதான் இந்த குளத்துக்கான தண்ணீர் ஆதாரம் ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆற்றில் கழிவுநீர் அதிகமாக கலந்து வருகிறது. இதனால் இந்த ஆறு மூலம் தண்ணீர் வசதி பெறும் குளங்களில் அதிகளவில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் குளங்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர் கடுமையாக துர்நாற்றம் வீசுவதால் அதன் அருகிலேயே செல்ல முடியாத நிலைதான் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையே கோவையில் உள்ள வாலாங்குளத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரையை பலப்படுத்தி அதை அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த குளத்தின் நடுவில் ரெயில் தண்டவாளம் மற்றும் சாலைவசதி உள்ளதால் 3 பிரிவாக உள்ளது. அதில் உக்கடத்தில் இருந்து சுங்கம் நோக்கி செல்லும் வழியில் மேம்பாலத்தின் இடதுபுறத்தில் இருக்கும் பிரிவில் குளத்துக்குள் அதிகளவில் கழிவுநீர் கலக்கிறது.

இதனால் குளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் அனைத்தும் பச்சையாக மாறி உள்ளது. அத்துடன் கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

160 ஏக்கர் கொண்ட வாலாங்குளத்தில் கழிவுநீர் கலந்தாலும் இதுவரை தண்ணீர் நிறம் மாறாமல் இருந்தது. தற்போது குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் மற்றும் உக்கடம் பெரியகுளத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரும் இங்கு கலப்பதால் அதன் நிறம் பச்சையாக மாறி விட்டது. இந்த குளத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்படும் என்று அறிவித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

ஆனால் குளத்துக்குள் கழிவுநீர் கலப்பதை தடுக்க இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான் ஏமாற்றமாக உள்ளது. அதிகமாக கழிவுநீர் கலந்து பச்சையாக மாறிவிட்டதால் அருகில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. வின்சென்ட் ரோட்டில் இந்த குளக்கரை பகுதியில் வீடுகள் உள்ளன. அங்கு இருப்பவர்கள் துர்நாற்றம் காரணமாக பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து முறையிட்டாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவை மாநகர பகுதியில் ஏராளமான குளங்கள் இருப்பது நமக்கு கிடைத்த வரப்பிரசா தம். ஆனால் அதில் தண்ணீருக்கு பதிலாக சாக்கடை கழிவுநீர் கலப்பதால் அந்த குளங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு கோவை மாநகராட்சி ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.