80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

0
40

வால்பாறையில் தனியார் குடோனில் வைத்திருந்த 80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை

மலைப்பிரதேசமான வால்பாறையானது இயற்கை எழில் கொண்டதாகவும், வனவிலங்குகள் அதிகம் வாழக்கூடியதாகவும் விளங்குகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அது தொடர்பாக உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் தூய்மை பணியாளர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தினார்கள்.

‘பேக்கிங்’ செய்ய பிளாஸ்டிக்

அப்போது திண்பண்டங்கள், குடிநீர் பாட்டில்கள் போன்றவை மொத்தமாக வினியோகம் செய்யப்படும் ஒரு குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. உடனே அந்த குடோனில் அதிரடி சோதனை செய்தபோது, திண்பண்டங்களை பேக்கிங் செய்வதற்காக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.