7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 390 பேர் மீது வழக்கு

0
79

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 390 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சோதனைக்கு எதிர்ப்பு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீட்டில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இது பற்றி அறிந்ததும் கோவையில் அ.தி.மு.க.வினர் எஸ்.பி.வேலுமணி வீட்டு கேட்டின் முன்பு சாலையில் அமர்ந்துகொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கோவை மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், செ.தாமோதரன், சூலூர் வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம் மற்றும் நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசார் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் அங்கு திரண்டு இருந்த எம்.எல்.ஏ.க்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

390 பேர் மீது வழக்குப்பதிவு

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 390 பேரை கைதுசெய்து, தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை இரவு விடுவித்தனர். இந்தநிலையில் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார் உள்பட 7 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 390 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் என்ற பிரிவின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.