கோவை, பிப்.11: 68வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, ஒரிசா, ஜார்க்கண்ட், டெல்லி, காஷ்மீர், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், 100,200,400,800,1000மீ ஓட்டம், தடை தாண்டுதல், ஈட்டி மற்றும் வட்டு எறிதல், ஷாட் புட், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான தடகளப் போட்டிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு சார்பாக 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் கோவை யூனிக் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த தியா, நேத்ரா, நிவேத்தா ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதில், மாணவி தியா 100,200மீ ஓட்டத்தில் தலா ஒரு தங்கமும், 400மீ ரிலே போட்டியில் ஒரு தங்கமும் வென்றார்.
மாணவி நேத்ரா 1600மீ ரிலே போட்டியில் ஒரு தங்கமும், 100மீ ஓட்டத்தில் வெண்கலமும் வென்றார். மாணவி நிவேதா 1600மீ ரிலே போட்டியில் வெண்கலம் வென்றார். எஸ்ஜிஎப்ஐ போட்டியில் கோவை மாவட்ட மாணவிகள் 4 தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவிகளை கோவை அத்லெட்டிக் கிளப் செயலர் சீனிவாசன், யூனிக் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ராஜ் குமார், துணைத் தலைவர் ராமசந்திரன் மற்றும் பயிற்சியாளர் வேல் முருகன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.