ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சியில், வீட்டு நாய் மற்றும் தெருநாய்களுக்கான ரேபிஸ் (வெறிநோய்) தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
மொத்தம், 36 வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும், 31 தெருநாய்கள் என, மொத்தம், 67 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி, செயல் அலுவலர் சுரேஷ்குமார், கால்நடை டாக்டர்கள், மருத்துவ அலுவலர் ரவி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரையின்படி வேட்டைக்காரன்புதுாரில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, நாளை 9ம் தேதி, ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ‘ரேபிஸ்’ தடுப்பூசி முகாம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.