மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், 2024–25ம் ஆண்டில் 6,577 ஆயிரம் மெட்ரிக் டன் உரங்கள் ரூ.12.70 கோடிக்கு இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை காட்டிலும் வியாபாரம் அதிகரித்துள்ளது.
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் மேட்டுப்பாளையம் கிளை செயல்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் மற்றும் பூண்டு இச்சங்கத்தின் விற்பனை கூடம் வாயிலாக தினசரி ஏலம் விடப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உரங்களில் 60 சதவிகிதம், சங்கத்தின் மேட்டுப்பாளையம் உரப்பிரிவில் நிறுவியுள்ள இரண்டு உரக்கலவை இயந்திரங்கள் வாயிலாக உற்பத்தி செய்யப்படுகிறது.
இதுகுறித்து நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் துணை பதிவாளர் முத்துகுமார் கூறியதாவது:-
மேட்டுப்பாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் உரங்கள், 17 நேரடி விற்பனை நிலையங்கள் மற்றும் 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 3 பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தேசிய கூட்டுறவு நிறுவனங்களிடம் இருந்து டி.ஏ.பி., யூரியா, அமோனியம் சல்பேட் போன்ற நேரடி உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, இங்குள்ள உரக்கலவையில் தேயிலை உரங்கள், காய்கறி உரங்கள் ஆகிய கலப்பு உரங்கள் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
2024–25ம் நிதியாண்டில் கடந்த ஆண்டு டிச.,31ம் தேதி வரை ரூ.12.70 கோடிக்கு நேரடி உரம் மற்றும் கலப்புரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 6,577 ஆயிரம் மெட்ரிக் டன் உரங்கள் இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்யப்பட்டது. 9,644 விவசாயிகள் உரங்களை வாங்கி பயன் பெற்றுள்ளனர்.
இந்தாண்டு இன்னும் இரண்டு மாதங்கள் விற்பனை உள்ள நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தற்போதே விற்பனை அதிகம் ஆகியுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உரங்கள் இங்கேயே இச்சங்கத்தின் உரப்பரிசோதனை கூடத்தில்,
சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒரு மூட்டை உரம் ரூ.1,400க்கு வெளியில் கிடைக்கும் நிலையில், நாங்கள் ரூ.940 க்கு மானிய விலையில் கொடுத்து வருகிறோம். எங்களது இணை இயக்குனர் தயாளன் அறிவுரையை பின்பற்றி உரங்களை தயாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், ”இங்கே தயார் செய்யப்படும் உரங்களில், 50 சதவீதம் வரை வேப்பம் புண்ணாக்கு போன்ற இயற்கை சார்ந்த உரங்களும் கலந்து, உரக்கலவையை எங்களுக்கு தருகின்றனர். இதனால் மண்ணின் வளம் மேம்படுகிறது. மகசூல் அதிகரிக்கிறது. நீலகிரி மாவட்ட விவசாயிகள் உருளைக்கிழங்குகளுக்கு இச்சங்கத்தின் உரங்களை தான் 90 சதவீதம் பயன்படுத்தி வருகிறோம்,” என்றனர்.