இலவச திருமணம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம், மாட்டு வண்டி பந்தயம் மற்றும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாளை (ஞாயிற் றுக்கிழமை) நடக்கிறது.
இலவச திருமணத்திற்காக கோவை சின்னியம்பாளையத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட செயலாளர்கள் தொண்டா முத்தூர் ரவி, தளபதி முருகேசன், பகுதி செயலாளர் சரத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி கோவை தி.மு.க. சார்பில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கோவை அவினாசி சாலை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
இதை தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்.
செங்கல் சூளை மின் இணைப்பு
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி அனுமதி இன்றி இயங்க கூடிய செங்கல்சூளைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அனுமதி உள்ள செங்கல் சூளைகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் கூடுதலாக 4,200 மெகா வாட் மின்சாரம் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த மின்சாரத்தை கொள்முதல் செய்ய டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விரைவில் 5 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்தி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு இடை தேர்தல்
ஒரு விவசாய நிலத்திற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட நில உரிமை யாளர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆதார் எண்க ளையும் இணைக்கும் வசதி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 99.7 சதவீத மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள மின் இணைப்புகளிலும் ஆதார் எண் இணைக்கப்படும்.
ஈரோடு இடைத்தேர்தலில் நினைத்த அளவுக்கு வாக்குகள் கிடைக்காத விரக்தியில் ஜனநாயகம் தோற்றுவிட்டது என்று அ.தி.மு.க.வினர் சொல்கிறார்கள். ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் முதல்-அமைச்சர் நிறுத்தும் வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்கள் என்பதற்கான அங்கீகாரம் ஆகும்.
சமீபத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஏறி உள்ளது. அதற்கு எந்த ஒரு கருத்தையும் அ.தி.மு.க. முன்வைக்க வில்லை. எனவே, அவர்களை மக்கள் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.