4 லட்சம் இளநீர் ஏற்றுமதி

0
85

இளநீர் ஏற்றுமதி அதிகரிப்பு

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கிடையில் பொள்ளாச்சி பகுதியில் இருந்து இளநீர் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் அதிகமாக இருப்பதால் பொள்ளாச்சி இளநீருக்கு தனி மவுசு உண்டு.

கடந்த ஏப்ரல் மாதம் வரை 2 லட்சத்து 50 ஆயிரம் இளநீர் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன்பிறகு கோடை மழை, தென்மேற்கு பருவமழையின் காரணமாக இளநீர் விற்பனை குறைந்தது. இதற்கிடையில் மழையின் காரணமாக இளநீர் உற்பத்தி அதிகரித்தது. தற்போது மழை குறைந்து உள்ளதால் இளநீர் தேவை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக இளநீர் ஏற்றுமதி அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையில் பொள்ளாச்சியில் சில்லறை விற்பனையில் ஒரு இளநீர் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-

4 லட்சம் இளநீர்

பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் இருந்து தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, மும்பை, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு இளநீர் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. நல்ல தரமான ஒட்டு ரக இளநீரின் விலை ரூ.27 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு டன் இளநீர் ரூ.9,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சென்னை உள்பட பிற பகுதிகளில் மழை இல்லாததால் இளநீர் தேவை அதிகரித்து உள்ளது.

இதற்கிடையில் புதுடெல்லியையொட்டி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால் அந்த பகுதிகளில் இளநீர் தேவை குறைந்து உள்ளது. மேலும் சண்டிகார், ராஜஸ்தான், ஐதராபாத் பகுதிகளில் இளநீர் தேவை அதிகரித்து உள்ளது. தேவை அதிகரித்து உள்ளதால் இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. தற்போது ஒரு நாளைக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு 4 லட்சம் இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.