4 ஆயிரம் கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல்

0
44

கோவையில் தொடரும் சம்பவம்

கோவை மாவட்ட பகுதியில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் பல இடங்களில் கஞ்சா மற்றும் போதை சாக்லெட்டுகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து கொண்டே இருக்கிறது.

கோவை நீலாம்பூர் பகுதியில் கடந்த வாரத்தில்தான் வடமாநில வாலிபரிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தநிலையில் நேற்று கருமத்தம்பட்டியில் மேலும் ஒரு வடமாநில வாலிபரிடம் கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

தனிப்படை சோதனை

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கருமத்தம்பட்டி மற்றும் சோமனூர் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த இருசக்கர வாகனத்தில் ஒரு பை இருந்தது. அந்த பையை திறந்து பார்த்தபோது, அதற்குள் ஏராளமான சாக்லெட்டுகள் இருந்தன.

4 ஆயிரம் கஞ்சா சாக்லெட்

அவற்றை போலீசார் சோதனையிட்டபோது போதை தரும் கஞ்சா சாக்லெட்டுகள் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் பீகாரை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 30) என்பதும், அப்பநாயக்கன்பட்டியில் ஓட்டல் நடத்தி வருவதும், கஞ்சா சாக்லெட்டுகளை மில்களில் வேலை செய்து வரும் வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.. இதையடுத்து மகேஷ்குமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 4 ஆயிரம் கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் அவரிடம் இருந்து 2¾ கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

வேறு யாருக்கும் தொடர்பு?

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

பீகாரை சேர்ந்த மகேஷ்குமார், சொந்த ஊருக்கு சென்று வரும்போது, கஞ்சா சாக்லெட்டுகளை ரெயில் மூலம் கடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். பின்னர் அவற்றை கோவை மாவட்டத்தில் உள்ள மில்களில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்து உள்ளார். ஒரு கஞ்சா சாக்லெட் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதில் அவர் மட்டும்தான் ஈடுபட்டு உள்ளாரா?, வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.