324 பூங்காக்களை ரூ.6½ கோடியில் சீரமைக்க திட்டம்

0
59

கோவை மாநகராட்சி பகுதியில் பராமரிப்பின்றி உள்ள 324 பூங்காக்களை ரூ.6½ கோடி செலவில் சீரமைக்கப்பட உள்ளது.

பூங்காக்கள்

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பூங்காக்கள் உள்ளன. செம்மொழிப்பூங்கா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பூங்காக்கள் கொரோனா தொற்றுக்குபின் முறையாக பராமரிக்கப்படவில்லை. பூங்காவில் உள்ள செடிகொடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படாமல் பல பூங்காக்களில் செடிகொடிகள் வாடிப்போய் விட்டன.

பூங்காக்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று குடியிருப்புவாசிகள், பொதுமக்கள் தரப்பில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டன.

ரூ.6½ கோடி

இந்தநிலையில் ரூ.6 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்து பூங்காக்களை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்கிறது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- கிழக்கு மண்டலத்தில் உள்ள 68 பூங்காக்கள் ரூ.1 கோடியே 16 லட்சம் செலவிலும், மேற்கு மண்டலத்தில் 60 பூங்காக்கள் ரூ.1 கோடியே 16 லட்சம் செலவிலும் மத்திய மண்டல பகுதியில் உள்ள 65 பூங்காக்கள் ரூ.1 கோடியே 67 லட்சம் செலவிலும் சீரமைக்கப்பட உள்ளன.தெற்கு மண்டலத்தில் உள்ள 61 பூங்காக்கள் ரூ.1 கோடியே 4 லட்சம் செலவிலும், வடக்கு மண்டலத்தில் உள்ள 70 பூங்காக்கள் ரூ.1 கோடியே 67 லட்சம் செலவிலும் சீரமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

600 இடங்கள்

கோவை மாநகராட்சி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 600 இடங்கள் உள்ளன. இந்த இடங்களிலும் பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.