நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
கோவை காந்திபுரம் பஸ் நிலையம், ரெயில் நிலையம், புலியகுளம், ராமநாதபுரம், பெரியகடை வீதி உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று 1,515 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. பெரும்பாலான முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் நேற்று காலை முதல் குவிந்தனர்.
அவர்களின் ஆதார் எண், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட மாதம் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் சரிபார்த்த பின்னர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினர். நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் முதல் தவணை தடுப்பூசி 936 பேரும், 2-ம் தவணை தடுப்பூசி 18,604 பேரும், பூஸ்டர் தடுப்பூசி 31,017 பேர் என மொத்தம் 50,557 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.