3.62 லட்சம் ரூபாய் ஆர்.டி.ஓ ., சோதனை சாவடியில் சிக்கியது

0
105

போத்தனூர் : கோவை மதுக்கரை அருகே ஆர்.டி ஓ., சோதனை சாவடியில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனையில், கணக்கில் வராத ரூ.3.62 லட்சம் ரொக்கம் சிக்கியது.

மதுக்கரை மரப்பாலம் அடுத்து சிறிது தொலைவில், வட்டார போக்குவரத்து அலுவலக (ஆர்.டி.ஓ., ) சோதனை சாவடி உள்ளது.

நேற்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில், நான்கு பேர் குழு திடீர் சோதனையில் ஈடுபட்டது.

அங்கிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குமார், நான்கு கவர்களில் வைத்திருந்த கணக்கில் வராத ரூ,3.21 லட்சம் ரூபாய் சிக்கியது.

அதுபோல் உள்நோக்கி வரும் வாகனங்களுக்கான சோதனை சாவடியில், அலுவலக உதவியாளர் ரோஸ்லின் வைத்திருந்த ரூ.38 ஆயிரம் சிக்கியது.

அலுவலக பெட்டியிலிருந்த, ரூ.3,500 சிக்கியது. தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடந்தது. மொத்தம், 3.62 லட்சத்து 500 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், இரவு 7:00 மணியளவில் புறப்பட்டுச் சென்றனர்.

முன்னதாக, போலீசார் கைப்பற்றிய ரொக்கம் குறித்த விபரங்களை தர குறிப்பிட்டு, இருவருக்கும் நோட்டீஸ் வழங்கினர்.

லஞ்சத்துடன் வந்த வாகன ஓட்டுனர்கள்

போலீசார் சோதனை குறித்து அறியாத சரக்கு வாகனங்கள் மற்றும் சுற்றுலா கார், வேன், பஸ் டிரைவர்கள், வழக்கம்போல டிரிப் ஷீட்டுடன் லஞ்ச தொகையை கொண்டு வந்தனர். இதனைக் கண்ட சோதனை சாவடி ஊழியர்கள் விரட்டினர். அப்போது பிளாஸ்டிக் பைப் ஏற்றி வந்த, கேரள லாரி டிரைவர் ஒருவரையும் விரட்டினர். ஆச்சரியமடைந்த டிரைவர், ‘இது தமிழ்நாடுதானா’ என, வியப்புடன் கேட்டுச் சென்றார்.