கோவை,
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றால அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கிறார்கள்.
அருவி அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதாலும், அருவிக்கு செல்லும் வழியில் காட்டு யானைகள் உள்பட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் சாடிவயல் சோதனைச்சாவடியில் நிறுத்தப்படுகிறார்கள். அங்கிருந்து அவர்கள் வனத்துறைக்கு சொந்தமான வாகனங்களில் அருவிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் வறண்டன. கோவை குற்றால அருவியில் மட்டும் குறைந்த அளவுக்கு தண்ணீர் விழுந்தது. அதை குடிப்பதற்காக வனவிலங்குகள் அதிகளவில் அருவிக்கு வந்தன. எனவே சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் கோவை குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இது குறித்து கோவை மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் கூறியதாவது:-
தண்ணீர் குறைந்ததால் கோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப் பட்டு இருந்தது. அருவி உற்பத்தியாகும் இடத்தில் நேற்று பரவலாக மழை பெய்து உள்ளது. இதனால் அருவியில் சற்று அதிகமாக தண்ணீர் கொட்டுகிறது. எனினும் அருவிக்கு வரும் தண்ணீரின் அளவை கண்காணித்து வருகிறோம்.
எனவே 3 மாதங்களுக்கு பிறகு இன்று (வெள்ளிக் கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று குளிக்கலாம். அருவிக்கு செல்லும் வழியிலோ, நீரோடையிலோ, வனப்பகுதிக்குள்ளோ சுற்றுலா பயணிகள் செல்ல கூடாது. அதை மீறி வனப்பகுதிக்குள் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.