கோவையில் தனியார் ஆஸ்பத்திரியில் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் வக்கீல் வீடு உள்பட 3 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை செய்தனர்.
ஆஸ்பத்திரிக்குள் புகுந்து தாக்குதல்
கோவை காந்திபுரம் 100 அடிரோடு ஜி.பி. சிக்னல் அருகே எல்லன் ஆஸ்பத்திரி உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன் (வயது 75) உள்ளார். இந்த ஆஸ்பத்திரியை சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் வாடகைக்கு எடுத்தார். இதனால் அந்த ஆஸ்பத்திரி சென்னை ஆஸ்பத்திரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இந்த ஆஸ்பத்திரிக்குள் புகுந்த கும்பல் தாக்குதல் நடத்தியதுடன், ஆஸ்பத்திரியை சூறையாடிவிட்டு தப்பிச்சென்றது.
இது தொடர்பாக போலீசார் டாக்டர் உமாசங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் வாடகை கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், ஆஸ்பத்திரியை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் உமாசங்கர், மருதவான் ஆகியோரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த உமாசங்கர் விபத்தில் பலியானார்.
வக்கீல் தலைமறைவு
இதற்கிடையே தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கு கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனரான டாக்டர் ராமச்சந்திரன் உள்பட பலர் இதற்கு காரணம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் டாக்டர் ராமச்சந்திரன் உள்பட 13 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய வக்கீல் ராஜேந்திரன் என்பவர் தலைமறைவானார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தில் சில ஆவணங்கள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வீட்டில் சோதனை
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல குழுக்களாக பிரிந்து கோவை சாய்பாபாகாலனியில் உள்ள ராஜேந்திரனின் வீடு, காந்திபுரத்தில் உள்ள அலுவலகம், விடுதி ஆகிய 3 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலையில் தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது.
இந்த சோதனையை முன்னிட்டு அந்த 3 இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்கள், ராஜேந்திரன் பாஸ்போர்ட்டு ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வக்கீல் ராஜேந்திரன் ஒரு அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.