சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை மாநகரில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 68 வாகனங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
சுதந்திர தின விழா
நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை வ.உ.சி. மைதானத்தில் 15-ந்தேதி (திங்கட்கிழமை) கலெக்டர் சமீரன் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். சுதந்திர தின விழாவை சீர்குலைக்க மர்ம நபர்கள் முயற்சிக்கலாம் என்பதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதற்காக கோவை மாநகரில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் வ.உ.சி. மைதானம், விமான நிலையம், முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள், கோவை மத்திய ரெயில் நிலையம், வடகோவை ரெயில் நிலையம் உள்பட 5 ரெயில் நிலையங்கள், 7 பஸ் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவை மாநகருக்கு வரும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வாகனங்கள் அனைத்தும் தீவிர வாகன சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும்.
வெளிநாட்டவர்களின் விபரம் சேகரிப்பு
மாநகரில் உள்ள 11 சோதனைச்சாவடி, 32 முக்கிய சந்திப்பு பகுதிகளில் 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். மாநகரில் 15 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் மக்கள் அதிகம் கூடும் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். முகஅடையாளம் காட்டும் செயலியுடன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். இதன்மூலம் சந்தேகத்திற்கிடமான நபரை போட்டோ எடுத்து செல்போன் செயலி மூலம் சரிபார்த்தால் அவர் ஏதேனும் குற்ற வழக்கில் தொடர்பு உள்ளவரா ? என்பது தெரிந்து விடும்.
கோவை மாநகரில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விபரங்கள் சேரிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரெயில்வே தண்டவாளங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநகரில் 44 இருசக்கர வாகனங்கள் மற்றும் 24 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 68 வாகனங்களில் ரோந்து பணிகள் நடைபெறுகிறது. ஏதேனும் அசாம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள அதிவிரைவு படை போலீசார் 2 இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.