26 ஐ.டி. நிறுவனங்கள் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலை

0
55

டைடல் பார்க்

கோவை விளாங்குறிச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) உள்ளது. இங்கு கூடுதலாக ரூ.114 கோடி யில் 6 மாடிகளை கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிட கட்டுமான பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பொதுப் பணித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அவர்களிடம் கட்டுமான பணி விபரங்களை அமைச்சர் கேட்டறிந்தார்.

ஆய்விற்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

இளைஞர்கள், பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

என்ஜினீயரிங் பட்டதாரிகள் அதிகம் இருக்கும் பகுதி கோவை. இங்கு எல்கார்ட் மூலமாக கட்டப்பட்டு வந்த கட்டுமான பணி தாமதமாக இருந்ததால் நேரில் ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

வேலைவாய்ப்பு

இந்த கட்டிடம் ரூ.114 கோடி செலவில் 6 தளங்களை கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது. இதில் தீயணைப்பு வசதி, லிப்ட், வாகன நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. கட்டுமான பணி நிறைவு பெற்றதும் 26 ஐ.டி. நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு, அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும்

இந்த கட்டிடத்தின் கட்டுமான பணி அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ந் தேதி முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிகளவு என்ஜினீயரிங் பட்டதாரிகள் உருவாகிறார்கள். கோவையில் ஐ.டி நிறுவனங்கள் அமைய இன்னும் கட்டிடம் தேவைப்பட்டால் அரசு இடங்கள், தனியார் இடங்களை கையகப்படுத்தி கட்டிடம் கட்டுவோம். இளைஞர், பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த இந்த அரசு முனைப்புடன் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.2.98 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி கூடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.