26 எப்.எல். 2 மது க்கடை லைசன்ஸ் பெற சிக்கல்: விண்ணப்பங்களை நிராகரிக்கிறது போலீஸ்

0
5

கோவை மாவட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 26 எப்.எல். 2 மதுபானக்கடை அமைப்பதற்கான தடையின்மை சான்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த சில ஆண்டுகளாக, எப்.எல்.2 எனப்படும் மதுக்கடைகள் அதிகரித்து வருகின்றன. கோவை மாநகர, மாவட்ட பகுதிகளை சேர்த்து தற்போது, 64 எப்.எல். 2 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், ஏற்கனவே போதைப்பொருட்களால் சீரழிந்து வரும் கோவை இளைஞர்கள், மது போதைக்கும் எளிதாக அடிமையாக வாய்ப்பு ஏற்படுகிறது. இது குறித்து, நமது நாளிதழில், ‘தள்ளாடுதே கோவை’ என்ற தலைப்பில், இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கோவையில் எப்.எல். 2 மதுக்கடைகள் அமைக்க முக்கிய புள்ளிகள், அரசியல்வாதிகள் என பலர் விண்ணப்பிக்கின்றனர். இதற்கு, போலீஸ் தரப்பில் தடையின்மை சான்று (என்.ஓ.சி.,) அளிக்க வேண்டும். தடையின்மை சான்று கிடைத்தால் மட்டுமே எப்.எல். 2 லைசன்ஸ் பெற முடியும்.

கோவை மாவட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த, நவ., மாதம் முதல் தற்போது வரை சுமார் 30 எப்.எல்.2 லைசன்ஸ் விண்ணப்பங்கள், தடையின்மை சான்றுக்கு வந்துள்ளன. அதில், 26 விண்ணப்பங்களுக்கு தடையின்மை சான்று வழங்க முடியாது என, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் நிராகரித்துள்ளார். நான்கு கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.பி., கார்த்திகேயன் தெரிவிக்கையில், ”சமீப காலமாக எப்.எல். 2 மதுக்கடைகளுக்கு தடையின்மை சான்று பெற, பல விண்ணப்பங்கள் வருகின்றன. விபத்து, பெண்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெரும்பாலான விண்ணப்பங்களை, நாங்கள் நிராகரித்து வருகிறோம்.

மெயின் ரோடு, பள்ளி, கல்லுாரி அருகில், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை.

மதுக்கடை எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்கவும், எப்.எல். 2 மதுக்கடைகளால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும், கடை இல்லாத இடங்களுக்கு மட்டுமே என்.ஓ.சி., வழங்கப்படுகிறது,” என்றார்.