கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த நெகமம் கப்பளாங்கரையில் பிரசித்தி பெற்ற பரமசிவன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பண்டிகையையொட்டி ஆடிப்பூர விழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா நடைபெற்றது. ,இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலுக்கு நெகமம் பகுதி மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து மாமாங்க கிணற்றில் புனிதநீர் வழிபாடு செய்வார்கள். மேலும் அருகில் உள்ள கோவில் விழாக்களுக்கு இந்த மாமாங்க கிணற்றில் இருந்து தீர்த்தம் முத்தரித்து கொண்டு செல்வார்கள். சிறுவர்கள் தீர்த்த குடம் எடுத்து செல்வார்கள். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மாமாங்க கிணற்றில் ஊற்று நீர் அதிகளவில் வந்து கிணறு நிரம்பியதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாட்டு வண்டியில் வந்து சாமி தரிசனம் செய்தனர். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு நெகமம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.