24 மணி நேரமும்! சாலை விதிகளை பின்பற்றணும்: ‘ஒன்வே’ நபர்களுக்கு எச்சரிக்கை

0
9

கோவை: சமீபகாலமாக நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் ஒன்வேயில் விதிகளை மீறி, இயக்கப்படும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. விதிமுறை மீறுவோருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகர பகுதிகளில் நடக்கும் சாலை விபத்துகளில், ஆண்டுதோறும் சுமார் 250 பேர் உயிரிழக்கின்றனர். இதனால், சாலை விபத்துகளை குறைக்கவும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், மாநகர போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகர போலீஸ் சார்பில், ‘ஹாட்ஸ்பாட்’களை கண்டறிந்து, தொடர் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மாநகர பகுதிகளில் அதிவேகம், மது போதையில் வாகனங்களை இயக்குவது, செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்குவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது, வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

மாநகரில், 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட விபத்துகள், இரவு நேரங்களில் நடக்கின்றன. போலீசார் பணியில் இருக்கும் வரை, விதிகளை பின்பற்றி செல்லும் வாகன ஓட்டிகள், இரவு 11:30 மணிக்கு மேல் தங்கள் இஷ்டத்திற்கு வாகனங்களை இயக்குகின்றனர். இதுவே இரவு நேர விபத்துகளுக்கு, முக்கிய காரணம்.

குறிப்பாக, நள்ளிரவில் லோடு ஏற்றி செல்லும் லாரி ஓட்டுநர்கள், ‘ஒன்வே’ போன்ற எதையும் பின்பற்றுவதில்லை. பல நேரங்களில் எதிர்திசையில் செல்கின்றனர். அதுவும், விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக அதிவேகமாக செல்கின்றனர். இதனால் பல நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. லாரி மட்டுமின்றி கார், இரு சக்கர வாகனங்களும் விதிகளை மீறி செல்கின்றன.

மாநகர போலீஸ் போக்குவரத்து துணை கமிஷனர் அசோக் குமார் கூறுகையில், ”லாரி உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து அறிவுறுத்தியுள்ளோம். காலை, இரவு என பார்க்காமல் வாகனங்களை எப்போது ஓட்டினாலும், விதிகளை பின்பற்ற வேண்டும். அதிவேகமாக செல்வதை குறைத்துக்கொண்டாலே, பல விபத்துகளை தடுக்கலாம்

‘ஒன்வே’யில் எதிர் திசையில் வாகனங்களை இயக்கினால், வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். விபத்து ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.