2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும்

0
66

2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும்

2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும் என்று கோவையில் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

சுதந்திர தின மாரத்தான்

75-வது சுதந்திர தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது.

இந்த மாரத் தான் ஓட்டமானது கல்லூரி யில் இருந்து லட்சுமி மில்ஸ் சிக்னல் மற்றும் முக்கிய சாலை வழியாக 7.2 கி.மீட்டர் வரை சென்று மீண்டும் கல்லூரியில் வந்தடைந்தது.

முன்னதாக இதை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

75 -வது சுதந்திர தினத்தையொட்டி இன்று (நேற்று) முதல் நாளை (திங்கட்கிழமை) வரை தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களை நினைவுகூறும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.

வல்லரசாக மாறும்

மலை கிராமங்களில் கூட தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுதந்திரத்திற்காக எண்ணற்ற தலைவர்கள் போராடி இருக்கின்றனர். சுதந்திரத்திற்காக போராடிய அறியப்படாத தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

தேசிய பக்தி இருப்பவர்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவார்கள். 2047-ல் அப்துல் கலாம் கண்ட கனவு நிறைவேறி இந்தியா வல்லரசாக மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரியில் நடந்த சுதந்திர தின அமுத பெருவிழாவில் பங்கேற்று பேசினார். அப்போது எல்.முருகன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி, கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.

தியாகிக்கு மரியாதை

இதில் பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரி முதல்வர் சுப்பாராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மத்திய இணை மந்திரி எல்.முருகன், வெள்ளக் கிணறு பகுதியில் உள்ள மறைந்த சுதந்திர போராட்ட தியாகி கோபாலசாமி வீட்டிற்கு சென்று அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.