போரின்போது பாலியல் வன்முறைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர டெனிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகிய இருவரும் போராடியவர்கள். அதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
நோபல் கமிட்டி அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயரை அறிவித்து உள்ளது. காங்கோ நாட்டை சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜா மற்றும் ஈராக்கை சேர்ந்த பெண் ஆர்வலர் நாடியா முராத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் டெனிஸ் முக்வேஜா காங்கோ குடியரசில் பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பணியாற்றியவர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற நற்பணிக்காக பணியாற்றி பெண்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதில் ஸ்திரமாக பணியாற்றியவர். பாலியல் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ சேவையை வழங்கியுள்ளார்.
பெண் ஆர்வலர் நாடியா முராத்
நாடியா முராத் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆளுகைக்கு கீழ் கொடூரமான வன்முறையை எதிர்க்கொண்டு உயிர்தப்பிய யாழிடி இன ஆர்வலர். 2014-ல் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் விஸ்தரித்த போது யாழிடி இன மக்கள் அவர்களால் கொடூரமான துன்புறுத்தல்களை எதிர்க்கொண்டார்கள். பெண்கள் அனைவரும் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டு கொடூரமாக நடத்தப்பட்டனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளால் நாடியா முராத்தின் 6 சகோதரர்கள் கொலை செய்யப்பட்டு, கடத்தப்பட்டார். இதுபோன்ற ஒரு நரக வாழ்க்கையை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மத்தியில் எதிர்க்கொண்டு தப்பியவர்தான் நாடியா முராத். ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை வெளியுலகிற்கு விவரித்தவர். இதனையடுத்து யாழிடி இன மக்களுக்கு மனித உரிமை ஆர்வலராக பணியாற்றி வருகிறார்.
ஐக்கிய நாடுகள் அவையால் பாலியல் அடிமைகளுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்போதும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பணியாற்றி வருகிறார்.