18.38 லட்சம் விமான பயணிகள் ஏழு மாதங்களில்

0
22

கோவை; கடந்த ஏழு மாதங்களில், 18.38 லட்சம் பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தியிருப்பது விமான நிலைய ஆணையத்தின் புள்ளிவிபரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

தொழில், வர்த்தகம், மருத்துவ தேவைக்களுக்காக கோவைக்கு விமானம் வாயிலாக அதிகளவில் பலர் வந்து செல்கின்றனர். கடந்த, அக்., மாதம் மட்டும், 2.58 லட்சம் பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்துள்ளனர். முந்தைய மாதங்களை ஒப்பிடுகையில், இது, 5.6 சதவீதம் அதிகம்.

கடந்த, ஏப்., முதல் அக்., மாதம் வரையிலான ஏழு மாதத்தில், கோவை விமான நிலையம் வழியாக 18.38 லட்சம் பேர் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டை ஒப்பிடுகையில், இது, 4.3 சதவீதம் அதிகம்.

கொங்கு குளோபல் போரம் இயக்குனர் சதீஷ் கூறியதாவது: அபுதாபி, சிங்கப்பூருக்கு புதிய விமான சேவை, உள்நாட்டு விமான சேவையை இன்டிகோ அதிகரித்தது ஆகியவை பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம்.விமான நிலையம் விரிவாக்கப்பட்டு, கூடுதல் விமானங்கள் வெளிநாடுகளுக்கு நேரடியாக இயக்கப்படும் போது பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும்.

சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் குவாண்டாஸ் விமானத்தை இணைக்கும் வகையில் கோவை – சிங்கப்பூர் இன்டிகோ விமானத்தின் நேரம் மாற்றப்பட்டால் அதிக பயணிகள் பயனடைவர். கோவையில் விமான சேவைக்கான தேவை அதிகளவில் உள்ளது. அதை பூர்த்தி செய்தால் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயரும். இவ்வாறு, அவர் கூறினார்.