122 ஆண்டுகள் பழமையான கல்லாறு பழப்பண்ணை

0
78

122 ஆண்டுகள் பழமையான கல்லாறு பழப்பண்ணையை மூட உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதால், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கல்லாறு பழப்பண்ணை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் மலர்களின் அரசி என வர்ணிக்கப்படும் உதகையின் அழகிய மலர்ப்பாதங்களில் உள்ள கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இயற்கை எழில் சூழலில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது.

ஆங்கிலேயர்களால் 1900 ஆம் ஆண்டு அரசு தோட்டக்கலைப் பண்ணை உருவாக்கப்பட்டது. இது 122 ஆண்டுகள் பழமையான பழப்பண்ணை ஆகும்.

இந்த பழப்பண்ணை கடல் மட்டத்தில் இருந்து 360 மீட்டர் உயரத்தில் 8. 92 எக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சராசரியாக ஆண்டுதோறும் 70 முதல் 80 நாட்கள் வரை மொத்தம் 130 சென்டி மீட்டர் முதல் 140 சென்டிமீட்டர் வரை மழை பெய்கிறது.

செயற்கை அருவிகள்

மிதவெப்ப சீதோஷ்ண நிலை கொண்ட இப் பண்ணையில் பாக்கு, சில்வர் ஓக், காபி நாற்றுகள், மலேசியாவை தாயகமாகக் கொண்ட மங்குஸ்தான், துரியன் பழம், ரம்புட்டான், இலவங்கப்பட்டை, எலுமிச்சை, நெல்லிக்காய், வெல்வட் ஆப்பிள் பலா ஆகிய பல்வேறு வகையான பழ மரங்கள் வாசனை திரவிய பயிர்கள், அலங்காரச் செடி வகைகளான குரோட்டன்ஸ், செம்பருத்தி, இக்சோரா, அரிக்கா பனை, பாக்கு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

பழ பண்ணையில் தயாரிக்கப்படும் நாற்றுக்கள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பழப்பண்ணையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளித்து விளையாடி மகிழும் செயற்கை அருவிகள், சிறுவர்கள் துள்ளி விளையாட சிறுவர் பூங்கா என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

சுற்றுலா பயணிகள்

கல்லாறு பழப்பண்ணையில் பழமையை பறைசாற்றும் விதமாக 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் காண்போர் வியக்கும் வண்ணம் ராட்சத விழுதுகளுடன் வானுயர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஆலமர விழுதுகள் கைகளை விரித்து சுற்றுலாப்பயணிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்பதைப் போல்பரந்து விரிந்து காணப்படுகிறது.

இத்தகைய சிறப்புகளை கொண்ட பழமைவாய்ந்த கல்லாறு பழப்பண்ணையில் சுற்றுலாப்பயணிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வழிகளில் உள்ள பெரிய சிறிய பாறைகளில் காண்போர் வியக்கும் வண்ணம் தத்ரூபமாக புலி, சிறுத்தை, குரங்கு, துள்ளியோடும் மீனை முதலை விழுங்குவது என வனவிலங்குகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

அதிர்ச்சி

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் யானைகள் வழித்தடமான கல்லாறு மற்றும் யானைகள் சாலையை கடந்து செல்லும் கோத்தகிரி சாலை ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்.

நீதிபதிகள் குழுவினரின் அறிவுரையின் பேரில் வனத்துறையின் வேண்டுகோளின்படி நெடுஞ்சாலை துறை சார்பில் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் சாலையை கடந்து செல்லும் வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி ஐந்துக்கு மேற்பட்ட இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது.

இது தவிர யானைகள் வழித்தடத்தில் உள்ள கல்லாறு பகுதியில் பல அதிரடி நடவடிக்கைகளுக்கான உத்தரவை உயர்நீதிமன்றம் வழங்கி வருகிறது.

இதன் முதல் கட்டமாக யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையை மூடிவிடவும், பழ பண்ணை இருக்கும் இடத்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.