தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கோவை மாநகர பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மாநகர பகுதியில் உள்ள கடைகளில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத்துக்கு புகார் சென்றது. இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கோவை ராஜவீதி, சலீவன் வீதி, கடைவீதி உள்பட பல்வேறு பகுதிகளில் இருக்கும் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக கடைகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
மாநகர பகுதியில் நேற்று நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 1,200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பைகள், தட்டுகள்தான் அதிகம். எனவே பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக வைத்து இருந்ததால் அந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும். எனவே பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, சணல் மற்றும் காகிதத்தில் செய்த பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.