1,100 போலீசார் பாதுகாப்புக்கு இருக்காங்க!

0
17

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் உள்ள இடங்களில், கண்காணிப்பு கோபுரங்கள், கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில், 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, சீருடை மற்றும் சீருடை இல்லாத போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.பி., கார்த்திக்கேயன் தலைமையில், ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் என, 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கோவில் முகப்பு பகுதி, வி.வி.ஐ.பி., பகுதி, அவசரப்பகுதிகளிலும், கோவில் மேற்பகுதியில், ‘ஏ’ முதல், ‘எப்’ வரையான முகப்பு பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப, இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினருக்கு பணிகள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், தீவிர கண்காணிப்பு செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம், ‘பாதுகாப்புக்கு நாங்க இருக்கோம்,’ என்ற உத்தரவாதம் தரும் வகையில், பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, உயர் அதிகாரிகள், போலீசாருக்கு உரிய அறிவுரை வழங்கியுள்ளனர்.

அன்னதானம்

கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, கோவில் மற்றும் பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏ.பி.டி., மற்றும் கோவில் ‘பார்க்கிங்’ உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டு அங்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.