11க்கு 10 ‘ரெடி!’ அன்னுார் மட்டும் விதிவிலக்கு; அமல்படுத்தப்படாத அரசு உத்தரவு

0
5

அன்னுார்; ‘அன்னுாரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மின் கோட்டம் அமைக்கப்படும்’ என, மின்வாரிய தலைவர் பிறப்பித்த உத்தரவு, இரண்டு ஆண்டுகள் ஆகியும் அமல்படுத்தப்படவில்லை.

அன்னுார் வட்டாரத்தில், ஸ்பின்னிங் மில், ஜின்னிங் பேக்டரி, ஸ்டீல் ரோலிங் மில், விசைத்தறிகள், பவுண்டரிகள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன.

சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரம் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர். புதிதாக 400க்கும் மேற்பட்ட, லே-அவுட் கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் இங்கு மும்முனை மின் இணைப்பு மற்றும் வீட்டு மின் இணைப்புகள் அதிக அளவில் உள்ளன. மும்முனை மின் இணைப்பு, டிரான்ஸ்பார்மர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக கோவை மற்றும் திருப்பூருக்கு மின் நுகர்வோர் செல்ல வேண்டி உள்ளது. இதனால் கடும் அலைச்சல் ஏற்படுகிறது. காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே, அன்னுரை தலைமையிடமாக கொண்டு புதிய மின் கோட்டம் அமைக்க வேண்டும் என, 10 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் முனைவோர் கோரி வந்தனர். இதையடுத்து, 2022ம் ஆண்டு ஜுலை 22ல் தமிழக மின்வாரிய தலைவர் பிறப்பித்த ஆணை 49ல், கோவை மாவட்டத்தில் அன்னூர், திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி உள்பட, 11 இடங்களில் புதிய மின் கோட்டங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டது.

இதில் அன்னூரைத் தவிர, 10 மின் கோட்டங்கள் அமைக்கப்பட்டு விட்டன. அன்னூரில் மட்டும் புதிய மின் கோட்டம் அமையவில்லை.

ஏமாற்றம்

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச்சங்க செயலாளர் கணபதி கூறுகையில், ”தமிழக மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருக்கு பல கடிதங்கள் எழுதி விட்டோம். அரசு உத்தரவு அமல்படுத்தப்படாமல் உள்ளது.

இதனால், அன்னுார் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மின் நுகர்வோர், கடும் ஏமாற்றத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர். மின்வாரியம் தான் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

உடனடியாக அன்னூரில் புதிய மின் கோட்ட அலுவலகம் அமைத்து அன்னூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மின் நுகர்வோருக்கு உதவ வேண்டும்,” என்றார்.