10 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் தொடங்க அனுமதி

0
51

தொழில் பாதுகாப்பு மாநாடு

கோவை சிறு, குறு தொழில் (எம்.எஸ்.எம்.இ) அசோசியேசன் சார்பில் தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் பாதுகாப்பு மாநாடு சுகுணா ஆடிட்டோரியத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து சிறு, குறு தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-
தவறான பொருளாதார கொள்கை

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, கார்ப்பரேட் ஆதரவு கொள்கை, பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையே அதிகளவு பாதிக்கப்பட்டது.

நாட்டிலேயே தமிழகத்தில் தான் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்காக சொத்து பிணையில்லா கடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி எடுத்து வருகிறது. கோவையில் 77 எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு ரூ.59.58 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது.

குறுந்தொழில் பேட்டை

தமிழகத்தில் 5 தொழிற்பேட்டை திட்டம் அறிவிக்கப்பட்டு 50 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங் கள் தொடங்குவதில் தமிழகம் 3 -வது இடத்தில் உள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது

சமூக நீதி, சமச்சீர் வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. கோவையில் குறுந்தொழில் பேட்டை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும். சிறு, குறு தொழில்களுக்கு அரசு சாரா நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வழங்க தமிழக அரசு ஆவண செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள மந்திரி

இதைத் தொடர்ந்து கேரள மாநில தொழில் துறை மந்திரி பி.ராஜீவ் பேசும் போது கூறியதாவது:-

சிறு, குறு, நடுத்தர தொழில் துறை என்பது குறைந்த முதலீட்டில் அதிகளவு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாகும். ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கையால் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவி வருகிறது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை பெரும் நெருக்கடியில் உள்ளது.

கேரள மாநில அரசு தொழில் துறை முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கேரள மக்களின் நுகர்வு சக்தி அதிகரித்து உள்ளது. கேரளத்தில் 24 சதவீத மக்கள் தனிப்பட்ட முறையில் 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளனர். இது அமெரிக்க மக்களின் வாழ்க்கை தரத்துடன் ஒத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.