ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு‘சீட் பெல்ட்’ போடாமல் சென்றதாக போலீஸ் ரசீதுசமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது

0
103
கோவை அருகே ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு சீட் பெல்ட் போடாமல் சென்றதாக போலீசார் ரசீது வழங்கி உள்ளனர். அந்த ரசீது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கட்டாய ஹெல்மெட் சட்டம்
தலைக்கவசம் உயிர்கவசம் என்பதால், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டமும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்தபடி செல்கிறார்கள்.
அத்துடன் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிமுறகைளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். ஒரு முறை சிக்கியவர் தொடர்ந்து சிக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்தும் செய்யப்பட்டு வருகிறது.
தனியார் நிறுவன ஊழியர்
இந்த நிலையில் கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவையை அடுத்த தமிழக- கேரள எல்லைப்பகுதியில் உள்ள வேலந்தாவளத்துக்கு கடந்த 7-ந் தேதி சென்றார்.
பின்னர் அவர் அன்று மாலையில் வீடு திரும்பினார். அவர் வேலந்தாவளம் அருகே வந்தபோது போக்குவரத்து போலீசார் அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற கார்த்திக்கை தடுத்து நிறுத்தினார்கள்.
தவறான தகவல்
தொடர்ந்து போலீசார் அவருடைய ஓட்டுனர் உரிமம், வாகன புத்தகத்துக்கான நகல், இன்சூரன்ஸ் நகல் ஆகியவற்றை கேட்டனர். அவை அனைத்தையும் கார்த்திக் முறையாக வைத்திருந்ததால், ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக ரூ.100 அபராதம் விதித்தனர். அந்த தொகையையும் அவர் உடனே போலீசாரிடம் செலுத்தி, ரசீதை பெற்றுக்கொண்டார்.
ஆனால் அவர் உடனே அந்த ரசீதை பார்க்கவில்லை. வீட்டிற்கு வந்ததும் அந்த ரசீதை பார்த்தபோது, ஹெல்மெட் அணியவில்லை என்று எழுதுவதற்கு பதிலாக தவறுதலாக சீட்பெல்ட் போட வில்லை என்று குறிப்பிடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வைரலாக பரவுகிறது
அதாவது போலீசார் வழங்கிய அந்த ரசீதில், எந்த வகையான வாகனம் என்று குறிப்பிடும் இடத்தில் மோட்டார் சைக்கிளின் பெயரும், எதற்காக அபராதம் என்று குறிப்பிடும் இடத்தில் ஹெல்மெட் அணியவில்லை என்பதற்கு பதிலாக சீட் பெல்ட் போடவில்லை என்றும் தவறுதலாக ஆங்கிலத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.அந்த ரசீதின் கீழ்ப்பகுதியில் அபராதம் விதித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கையெழுத்து போட்டு சீலும் வைத்து உள்ளார். இந்த ரசீது முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் இளைஞர்கள் பலர் போலீசாரின் இந்த செயலை கிண்டல் செய்து பதிவிட்டு உள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரணை
வாகன தணிக்கையில் ஈடுபட்ட அந்த சப்-இன்ஸ்பெக்டர் அவசரத்தில் தவறுதலாக இதுபோன்று எழுதி ரசீது வழங்கி உள்ளார். பொதுவாக கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் எந்த ஒரு ஆவணத்தையும் தயார் செய்யும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.ஆனால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு சீட்பெல்ட் போடாமல் வந்ததாக அபராதம் விதித்து ரசீது வழங்கியதை ஏற்க முடியாது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் காரில் சென்றவருக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றதாக அபராதம் விதித்து ரசீது வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது கோவை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்றதாக அபராதம் விதித்து ரசீது வழங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.