கோவை; அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகள் இனி, டிக்கெட் கட்டணம் செலுத்த க்யூ.ஆர் கோடு, ஏ.டி.எம்., கார்டு வாயிலாக பணம் செலுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களை, நவீன தொழில்நுட்ப உதவியுடன், சேவைகளை எளிமைப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர பஸ்களின் வருகை குறித்து அறிய, ‘பஸ்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், பஸ் எந்த சாலையில் வந்து கொண்டிருக்கிறது என்பதை, பஸ்சில் பொருத்தியுள்ள, ஜி.பி.ஆர்.எஸ்.,கருவி வாயிலாக, அறிந்து கொள்ள முடியும்.
இதன் தொடர்ச்சியாக, ‘டிஜிட்டல்’ சேவைகளை கோவை பயணிகளுக்கு வழங்க, அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, க்யூ.ஆர்., கோடு வசதி மற்றும் ஏ.டி.எம்., கார்டு வாயிலாக டிக்கெட் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்கான ‘டிஜிட்டல்’ கருவி, 100 சதவீதம் பெறப்பட்டுள்ள நிலையில், வங்கியுடன் அவற்றை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மட்டும், நிலுவையில் உள்ளன.
அதற்கான பணியும் இரு மாதங்களுக்குள் முடிந்து விடும். இந்நடைமுறையை, அனைத்து டவுன் பஸ்களிலும் மிக எளிதாக பயன்படுத்த முடியும். கண்டக்டர்களின் பணியும் எளிதாகும்.
இவ்வாறு, அவர் கூறினார்.