கோவை: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளத்தில் எந்நேரமும் காதல் ஜோடிகள் ஆக்கிரமித்திருக்கின்றன. சில சமயங்களில் முகம் சுழிக்கும் வகையில், எல்லை மீறுவதால், குடும்பத்தோடு வரும் பொதுமக்கள் சங்கடப்படுகின்றனர்.
கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவழித்து மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. நடைபாதை, சிறுவர்கள் விளையாடுமிடம், இருக்கை வசதிகள் செய்திருப்பதால், நல்லதொரு பொழுதுபோக்கிடமாக மாறியிருக்கின்றன.
உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளக்கரையை காலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் ‘வாக்கிங்’ செல்வோர் பயன்படுத்துகின்றனர். மற்ற நேரங்களில் ஆங்காங்கே காதல் ஜோடியினர் அமர்ந்து, பேசிக் கொண்டிருக்கின்றனர்.
வழி நெடுக அமர்ந்திருப்பதோடு, கடந்து செல்வோர் முகம் சுழிக்கும் அளவுக்கு சிலர் சில்மிஷங்களில் ஈடுபட்டு, எல்லை மீறுகின்றனர். குழந்தைகளோடு வரும் குடும்பத்தினர், சில காதல் ஜோடிகளின் அத்துமீறல்களை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
பூங்காவில் அமர்ந்திருப்போரை கண்காணிக்க, பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். ஆங்காங்கே ‘சிசி டிவி’ கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் கூட, எதையும் பொருட்படுத்தாமல் ஏதேனும் ஓரிடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
பொது இடத்தில் அநாகரிகமாக, மற்றவர்கள் முகம் சுழிக்கும் வகையில் சில்மிஷங்களில் ஈடுபடுவது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரோந்து போலீசார், கூடுதல் கவனம் செலுத்தி ரோந்து செல்வதோடு, சில்மிஷ ஜோடிகளுக்கு ‘கவுன்சிலிங்’ வழங்க வேண்டும்.
பராமரிப்பில் கவனம் செலுத்துங்க!
உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளக்கரைகள், பல கோடி ரூபாய் செலவழித்து மேம்படுத்தப்பட்டன. பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன. வாலாங்குளத்தில் படகு இல்லம் வீணாகி வருகிறது. இவ்விரு குளங்களிலும் ஆகாயத் தாமரைகள் படர்ந்திருக்கின்றன. வாலாங்குளத்தின் வடக்கு கரையில், சுங்கம் டெப்போ பின்புறமுள்ள பகுதி மேம்படுத்தப்பட்டது. அவ்விடம் எவ்வித பயன்பாடும் இன்றி, வீணாகி வருகிறது. உக்கடம் பெரிய குளத்தின் கடைசி பகுதியில், இரும்பு கழிவு பொருட்களால் டெலிபோன், அடிகுழாய், கார் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதி பராமரிப்பின்றி, புதர்மண்டியிருக்கிறது. இரு குளங்களின் கரைகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி, கழிவு நீரை சுத்திகரித்து குளங்களில் தேக்கினால், ஆகாயத்தாமரை மீண்டும் வளர வாய்ப்பிருக்கிறது. சுத்திகரிப்பு நிலையங்களை பயன்படுத்தாமல் கழிவு நீரை தேக்குவதால், இப்பிரச்னை தொடர்கிறது.