கோவை: வேளாண் பல்கலையில் உள்ள ஹாக்கி மைதானம், உலகத் தரத்தில் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளன
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களை, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விரிவுபடுத்தவும், மிகத்தரமான மைதானங்களை உருவாக்கவும், நடவடிக்கை எடுத்து வருவதாகவும், துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கோவை வேளாண் பல்கலை வளாகத்தில் உள்ள மைதானங்கள், 2,000 – 2,500 மாணவர்களுக்கு போதுமானது. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கை 5,000 ஆக உயர்ந்துள்ள நிலையில், அவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பது அவசியம். தற்போதைய விளையாட்டு மைதானங்கள், ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்றன. ஒரே சமயத்தில் பல்வேறு விளையாட்டுகளை விளையாட, அவை போதுமானதாக இல்லை.
அதாவது, கால்பந்து விளையாடினால், கிரிக்கெட் விளையாட முடியாது. ஹாக்கி விளையாடினால், தட கள வீரர்கள் பயன்படுத்த முடியாது. எனவே, அவற்றைத் தரம் உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
கபடி மைதானத்துக்கு, ‘டர்ப்’ எனப்படும் செயற்கைப் புல்தரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதனை நிரந்தரமாக பொருத்தவில்லை.
அந்த மைதானத்தைத் தயார் செய்யவே, ஒரு மணி நேரம் வரை வீணாகிறது. எனவே, நிரந்தரமாக நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தற்போதைய ஹாக்கி மைதானம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
பல்கலை வளாகத்தின் மேற்குப்பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இங்கு, உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் உருவாக்கப்படும்.
விளையாட்டு மைதானத்தில், தற்போது இரவில் விளையாட போதுமான விளக்கு வசதி இல்லை. அதற்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதுபோன்று செயற்கைப் புல்தரை, வசதியான கேலரிகள் என படிப்படியாக, உலகத்தரத்திலான மைதானம் உருவாக்கப்படும்.
இதற்காக, நிதி திரட்டப்படுகிறது. பல்கலை வளாகத்தில் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதித்ததில் கிடைத்த வருவாய், இதற்காக செலவிடப்படும்.
‘தமிழ்நாடு வேளாண் பல்கலை ஹாக்கி சம்மேளன’த்துடன் இணைந்து, ஹாக்கி மைதானம் மேம்படுத்தப்படும். மாணவர்களுக்கான இதர வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு, துணைவேந்தர் தெரிவித்தார்