வேலை வாங்கித்தருவதாக பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி

0
145

வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

கோவை ஜோதிபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மாலதி (வயது 30). பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- நான் ரத்தினபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு ஜெய்கணேஷ் என்பவர் என்னிடம் வந்து தான் ரத்தினபுரி சுந்தரம் வீதியில் வசிப்பதாக கூறி அறிமுகமானார். அவர் என்னிடம் பிரதம மந்திரி யோஜன திட்டத்திற்காக வந்து உள்ளேன். மேற்கண்ட முகவரியில் எனக்கு அலுவலகம் உள்ளது என்றார்.

5 லட்சம் மோசடி

மேலும் அவர், தனக்கு அரசியல் பிரமுகர்கள், சென்னை தலைமைச் செயலக அரசு அதிகாரிகளின் பழக்கம் உள்ளது. அரசு வேலை வேண்டும் என்றால் வாங்கி தருகிறேன் மத்திய கோ-ஆப்ரேட்டிவ் வங்கியில் வேலை காலியாக உள்ளது. அதற்கு ரூ.5 லட்சம் செலுத்தினால் வேலை வாங்கிவிடலாம் என்றார்.

இதனை உண்மை என நம்பிய நான் அவரிடம் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.5 லட்சத்தை கொடுத்தேன். அதன்பின்னர் அவர் வேலையில் சேருவதற்காக ஆர்டரை கொரியர் மூலம் அனுப்பி வைத்தார். அந்த ஆர்டரை பார்த்தபோது அது போலி என்பது தெரியவந்தது. உடனே நான் அவரது அலுவலகத்துக்கு சென்றேன். ஆனால் அவர் அங்கு இல்லை. செல்போனில் அவரை தொடர்பு கொண்ட போது அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை.

அப்போது தான் அவர் என்னை ஏமாற்றியது தெரியவந்தது. எனவே என்னிடம் வங்கியில் வேலை வாங்கி வருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த ஜெய்கணேஷ் என்பரை கண்டு பிடித்து எனது பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெய்கணேஷை வலைவீசி தேடி வருகிறார்.