கோவை,: கோவை
யில் நேற்று நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு, 7,790 பேர் வந்திருந்தனர். அதில், 1,141 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து இந்துஸ்தான் கல்லுாரி வளாகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நேற்று நடத்தின.
274 நிறுவனங்கள் பங்கேற்று, வேலைதேடி வந்தவர்களிடம் நேர்காணல் நடத்தின. இந்நிறுவனங்களில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 10 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது; வேலை கேட்டு, 7,790 பேர் வந்திருந்தனர்.
அதில், 1,141 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. 62 மாற்றுத்திறனாளிகள் வந்திருந்ததில், 13 பேருக்கு வேலை கிடைத்தது. 1,859 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
விழாவில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி, எம்.பி., ராஜ்குமார், மேயர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.