வேட்டை தடுப்பு அலுவலகத்தை சூறையாடிய காட்டுயானைகள்

0
72

காட்டுயானைகள் முகாம்

வால்பாறை பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் பல்வேறு எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து இருந்து வருகிறது. இவை நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 2 நாட்களாக கருமலை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு இருந்த யானைகள், அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் இருந்த சத்துணவு மையத்தை உடைத்து சேதப்படுத்தியது. இதேபோன்று குரங்குமுடி முருகன் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு இருந்த யானைகள், அங்குள்ள பள்ளியின் சத்துணவு மையத்தை உடைத்து சேதப்படுத்தியது.

கதவு, ஜன்னல் உடைப்பு

இந்த நிலையில் பெரியகல்லாறு எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 6 யானைகள் கொண்ட கூட்டம் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்தது. மேலும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரியகல்லாறு வனச்சுற்று வேட்டை தடுப்பு காவலர் முகாம் அலுவலகத்தின் கதவையும், ஜன்னலையும் உடைத்து சேதப்படுத்தி சூறையாடியது.

பின்னர் அருகில் இருந்த பாண்டி என்பவரின் வீட்டின் சமையலறை சுவற்றை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டு சேதப்படுத்தியது. வீட்டின் முன்பக்கத்தில் உள்ள கதவையும், ஜன்னலையும் உடைத்து உள்ளே நுழைய முயற்சித்தது. இதனால் வீட்டுக்குள் இருந்த பாண்டி பீதியில் பின்பக்கம் பதுங்கி கொண்டார்.

தொழிலாளி மீட்பு

இதை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாண்டியை பின்பக்க வாசல் வழியாக பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து வாகனத்தில் சைரன் ஒலிக்க செய்தும், கூச்சலிட்டும் தொழிலாளர்களுடன் இணைந்து நீண்ட நேரம் போராடி யானைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். மேலும் வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்கள் வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வந்த யானைகள் கூட்டம், பெரியகல்லாறு பகுதியில் வனத்துறையினரின் வேட்டை தடுப்பு காவலர் முகாம் அலுவலக ஜன்னலையும், கதவையும் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.