வேக கட்டுப்பாட்டுக்காக வைத்த இரும்பு தடுப்புகள் திடீர் அகற்றம்

0
74

வேக கட்டுப்பாட்டுக்காக வைத்த இரும்பு தடுப்புகள் திடீர் அகற்றம்

கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் வேக கட்டுப்பாட்டுக்காக வைத்த இரும்பு தடுப்புகள் திடீரென அகற்றப்பட்டுள்ளது.

தொடர் விபத்துகள்

கோவை-பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த 4 வழிச்சாலையோரங்களில் ஏராளமான கிராமங்கள் இருப்பதால் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல வசதியாக 2½ கிலோ மீட்டர் இடைவெளியில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் வாகனங்கள் அதிவேமாக செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை கிணத்துக்கடவு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பாளையம் சேரன்நகர் முதல் கிணத்துக்கடவு ஏலூர்பிரிவு வரை நடைபெற்ற தொடர் விபத்துகளில் சுமார் 15 பேர் பலியாகி உள்ளனர்.

சாலையில் இரும்பு தடுப்புகள்

இந்த நிலையில் 4 வழிச்சாலையில் அதிகரிக்கும் தொடர் விபத்துகள் குறித்து கிணத்துக்கடவு போலீசார் ஆய்வு நடத்தினர். இதில், பெரும்பாலான விபத்துகள் அதிவேகமாக வரும் வாகனங்களால் ஏற்படுவதாக போலீசார் அறிந்தனர். இதையடுத்து விபத்தை தடுக்க முதல் கட்டமாக கிணத்துக்கடவு போலீசார் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுரையின்படி வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சாலையில் இரும்பு தடுப்புகள் வைக்க முடிவு செய்தனர்.

இதன்படி கிணத்துக்கடவு போலீசார் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதியான கிணத்துக்கடவு ஏழூர் பிரிவு, கோவில்பாளையம் சேரன்நகர், மேட்டுப்பாளையம் பிரிவு, கோதவாடிபிரிவு ஆகிய 4 இடங்களில் இரும்பு தடுப்புகள் வைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். விபத்துகளும் குறைந்தன.

திடீர் அகற்றம்

ஆனால் தற்போது 4 வழிச்சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் திடீரென அகற்றப்பட்டு, சாலையோரத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் மீண்டும் கோவை-பொள்ளாச்சி சாலையில் விபத்துகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, கிணத்துக்கடவு பகுதியில் மழை காரணமாக அடிக்கடி மேகமூட்டம் இருப்பதால், சாலை நடுவே உள்ள இரும்பு தடுப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த 4 வழிச்சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. உயர் அதிகாரிகளிடம் இருந்து அடுத்த உத்தரவு வந்ததும், சாலையில் இரும்பு தடுப்புகள் வைக்கப்படும்.

எனவே சாலையை கடக்கும்போது வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.