வேகமாக வண்டி ஓட்டாதீங்க ப்ளீஸ்! அதிகரிக்கும் சாலை விபத்துக்கள் நிம்மதியை இழக்கும் குடும்பங்கள்

0
7

கோவை: ‘எக்சாம்ல நல்ல மார்க் எடு; நீ கேக்கற பைக்கை வாங்கித்தர்றேன்…’

 இப்படித்தான் சில பெற்றோர் பிள்ளைகளுக்கு வாக்கு கொடுத்து விட்டு, அதிக மதிப்பெண் வந்ததும், வேறு வழியின்றி பைக் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர்…மகனின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமலே! இனி இப்படி சிறுவர்களுக்கு பைக் வாங்கித்தராதீர் பெற்றோரே என, எச்சரிக்கின்றனர் போக்குவரத்து போலீசார்.

இரு சக்கர வாகன விபத்துக்களில் பலியாகுபவர்கள் அல்லது கை, கால் இழந்து படுக்கையில் முடங்குபவர்களில், இது போன்ற ஆர்வக்கோளாறு சிறுவர்களே அதிகம் என்கின்றனர் அவர்கள்.

தமிழகத்தில் நடக்கும் மொத்த சாலை விபத்துக்களில், இரு சக்கர வாகன விபத்துக்களே அதிகம். சராசரியாக 43 முதல் 45 சதவீத விபத்துக்களுக்கு, இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்களின் வேகம், விதிமுறை மீறல்களே காரணமாக அமைகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில், ஒவ்வொரு நாளும் சராசரியாக சாலை விபத்துக்களால் மட்டும், 43 முதல் 50 பேர் வரை உயிரிழப்பதாக, புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில், இரு சக்கர வாகனங்களே அதிகம்.

உதாரணமாக, 2024 ஜன., மாதம் நடந்த மொத்த விபத்துகள், 428. இதில், 44.84 சதவீதம் இரண்டு சக்கர வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது; மொத்த இறப்புகளிலும், 41.39 சதவீதம் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளாகவே உள்ளனர்.

கோவை மாவட்டத்தில், 2024ல் 1178 விபத்துக்கள் நடந்துள்ளன. அதில், 288 பேர் உயிரிழந்துள்ளனர் .

காவல்துறை தரப்பில், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், விதிமுறை மீறுபவர்களை கட்டுப்படுத்துவது, பெரும் சவாலாகவே உள்ளது.

இதுபோன்ற சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களின் குடும்பத்தினர் மனதளவிலும், பொருளாதார ரீதியாகவும் நிலைகுலைந்து போகின்றனர்.

இறப்பு என்பது ஒரு புறம் இருக்க, விபத்துக்களில் உடல் உறுப்புகளை இழக்கும் இளைஞர்கள், வாழ்க்கை முழுவதும் பிறரை சார்ந்தே இருக்கும் சூழல், அதைவிட கொடுமையானது.

கோவை அரசு மருத்துவமனையில் செயற்கை கால் வேண்டி வந்திருந்த 36 வயது இளைஞர் ரகு, ஒரு வழிபாதையில் சென்றதால், விபத்து ஏற்பட்டு ஒரு காலை இழந்து, வேலையும் இழந்து தவித்து வருகிறார்.

அதே போன்று, குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித்தந்த 25 வயது லோகேஷ் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கியதில், கால்கள் உடைந்து, ஒரு மாதமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்கள் மட்டுமல்ல…விபத்தில் பாதிக்கப்பட்டு படுக்கையில் முடங்கிக்கிடக்கும் ஒவ்வொருவரும் சொல்வது இதுதான்…

 

‘தயவு செய்து வேகமாக வண்டி ஓட்டாதீங்க…சாலை விதிமுறைகளை சரியா பாலோ பண்ணுங்க… ப்ளீஸ்!’

ஒரு 2 கி.மீ., சுற்றி போயிருந்தால், இன்று நன்றாக இருந்து இருப்பேன். ‘ஒன் வேயில்’ சென்று வாழ்க்கையே இழந்து நிற்கின்றேன். ஒரு சிலர் பெட்டிக்கடை வைக்க, உதவி செய்வதாக கூறியுள்ளனர். எனக்கு ஆறு மாதம் முன்பே, வேகமாக சென்று கால் விரலில் அடிப்பட்டது. அப்போதே கவனமாக இருந்து இருந்தால், மீண்டும் தவறு செய்து இருக்க மாட்டேன். யாரும் சாலை விதிமுறைகளை மீறாதீர்கள். பட்ட பிறகுதான் புரியும்.

– ரகு, விபத்தில் பாதிக்கப்பட்டவர்.

நான் தான் வீட்டிற்கு வருமானம் ஈட்டிவந்தேன். ஒரு மாதமாக வேலைக்கு போக முடியவில்லை. இனி எழுந்து நடக்க, ஒரு மாதத்துக்கு மேல் ஆகும். நான் கஷ்டப்படுவது மட்டுமின்றி, குடும்பத்தையும் சிரமப்படுத்தி விட்டேன். இனி வாகனமே வேண்டாம் என்று தோன்றுகிறது. வேகமாக யாரும் வண்டி ஓட்டாதீர்கள்; சாலை விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்றுங்கள்.அடிபட்டு படுக்கையில் முடங்கிய பிறகுதான், எல்லாமே தெரிகிறது.

லோகேஷ், விபத்தில் பாதிக்கப்பட்டவர்.