வெள்ளை ஈ பிரச்னைக்கு தீர்வு காண வல்லுனர் குழு!: விவசாயிகளிடம் கலெக்டர் உறுதி

0
5

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலுக்கு தீர்வு காண, வல்லுனர் குழு அமைக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு, ஆறுதல் தெரிவித்துள்ளது

கோவை கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:

ஆழியாறு ஆயக்கட்டு பாசனத்துக்கு, ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஜூன் மாதத்தில்பருவமழை துவங்கி, தொடர்ந்து பெய்து விவசாய பயிர்கள் சேதமாகின்றன. அதனால் மே மாதம் தண்ணீர் திறக்கவேண்டும்.

அதே போல, ஆழியாறு அணை நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில், விவசாயிகள் வண்டல் அள்ள அனுமதிக்க வேண்டும். சாய்பாபா காலனி எம்.ஜி.ஆர்., காய்கறி மார்க்கெட்டில், மழை காலங்களில், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும். தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலுக்கு, தீர்வு காணும் வகையில், வேளாண் பல்கலை பேராசிரியர்கள், தோட்டக்கலைத்துறையினர், வருவாய்த்துறை, விவசாயிகள் அடங்கிய வல்லுனர் குழு அமைக்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் வாயிலாக குளம், குட்டைகளை தூர்வாரவும், நியாயவிலைக் கடைகளில் மரச்செக்கில் தயாரித்த தேங்காய் எண்ணெயை, விநியோகிக்க வேண்டும்.

கொப்பரை தேங்காய்க்கு ஊக்கத்தொகை வழங்கவும், தென்னை நார் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்டுப்பன்றிகளின் தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும், குட்டை ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும், நொய்யல், கவுசிகா நதி மற்றும் பவானி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். சட்டபூர்வமற்ற நில அபகரிப்பை தடுக்க வேண்டும்.

இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் உறுதியளித்தார்.