ஆனைமலை, ; ஆனைமலை அருகே, திவான்சாபுதுாரில் வெள்ளை ஈ கட்டுப்படுத்துதல் குறித்து நாளை, (28ம் தேதி) விழிப்புணர்வு கூட்டம் நடக்கிறது.
தென்னை மிக முக்கியமான எண்ணெய் வித்து பயிராகும். தமிழகத்தில், தென்னை, 4.50 லட்சம் ெஹக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலையில், 23 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் காலநிலையில், தென்னையில் பல்வேறு விதமான நோய்கள், பூச்சி தாக்குதலால் மகசூல் பாதிப்படைந்து உற்பத்தி திறன் குறைந்து வருகிறது.
தென்னையில், 100க்கும் மேற்பட்ட பூச்சிகள் காணப்பட்டாலும், காண்டாமிருக வண்டு, சிவப்பு கூண்வண்டு, கருந்தலைப்புழு, ஈரியோபைட், சிலந்தி, ரூகோஸ் வெள்ளை ஈ போன்ற பூச்சிகள் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள், 2016ம் ஆண்டு முதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஈக்கள் தாக்கப்பட்ட இலைகளில் உட்பகுதியில், சுருள் சுருளாக நீள் வட்ட வடிவில் முட்டைகள் காணப்படும்.
முட்டைகளின் மீது மெழுகு போன்ற வெள்ளை நிறத்தில் துகள்களால் மூடப்பட்டு இருக்கும் இளங்குஞ்சுகள், முதிர்ச்சி அடைந்த ஈக்கள், ஓலைகளில் மகசூலை பாதிக்கின்றன. மேலும், வளர்ச்சியும் தடைபடுகின்றது.
தென்னை ரகங்களில், குட்டை ரகங்கள் மிக அதிக தாக்குதலுக்கு உள்ளாகின்றது. குறிப்பாக சவுகாட் ஆரஞ்சு குட்டை,மலேசிய மஞ்சள் குட்டை, மலேசியன் ஆரஞ்சு குட்டை, சவுகாட் பச்சை குட்டை மற்றும் கென்தாளி குட்டை ரகங்களிலும் அதிகபட்ச தாக்குதல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கலப்பின ரகங்களில் நெட்டை — குட்டை, குட்டை — நெட்டை குறைவாகவும், நெட்டை — நெட்டை ரகங்களில் குறைவாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து தோட்டக்கலைத்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆனைமலை தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:
சுருள் ஈக்களை கட்டுப்படுத்த தென்னந்தோப்புகளில், விளக்குப்பொறி ஏக்கருக்கு இரண்டு வீதம் இரவில், ஏழு மணி முதல் 11 மணி வரை வைத்து கட்டுப்படுத்தலாம்.
மஞ்சள் நிற ஒட்டுப்பொறி ஏக்கருக்கு, 10 வீதம், ஆறு அடி உயரத்தில் தொங்கவிட்டு கட்டுப்படுத்தலாம். தாக்கப்பட்ட மரங்களில், கீழ் ஓலைகளில் விசைத்தெளிப்பான் வாயிலாக தண்ணீரை வேகமாக பீச்சியடித்து ஈக்களை கட்டுப்படுத்தலாம்.
வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளை என்கார்சியா என்ற ஒட்டுண்ணி, குளவி வாயிலாக ஏக்கருக்கு, 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது, 10 மரம் இடைவெளியில் வைத்து கட்டுப்படுத்தலாம்.
கிரைசோபிட் என்ற பச்சை கண்ணாடி இறக்கை பூச்சி இரைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு, 300 வீதம் வைத்து கட்டுப்படுத்தலாம். சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலால் ஏற்படும் கரும்பூசணத்தை, மைதா மாவு பசை கரைசலை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
செயற்கை மற்றும் ரசாயன பூச்சி கொல்லியை பயன்படுத்தக்கூடாது. மிக அதிகளவில் தாக்குதல் இருந்தால் வேப்ப எண்ணெய், 30 மி.லி., ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து தென்னை ஓலையில், அடிப்பகுதியில் ஒரே ஒரு முறை மட்டும் தெளிக்கலாம்.
திவான்சாபுதுாரில், வரும், 28ம் தேதி வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்துது பற்றி கூட்டம் ஆனைமலை வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெறுகிறது. அனைத்து தென்னை விவசாயிகளும் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.