வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

0
1

பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறி, சுவாமி தரிசனம் முடித்துவிட்டு கீழே இறங்கும்போது, மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழந்தார்

திண்டுக்கல் மாவட்டம், கம்பர்பட்டியை சேர்ந்தவர் முருகன்; கூலித்தொழிலாளி. திருமணமாகி, மனைவி மற்றும் விஷ்வா,15 என்ற மகனும் உள்ளனர். விஷ்வா, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவிற்காக காத்திருந்தார்.

முருகன், தனது மகன் விஷ்வா மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் ஆன்மிக சுற்றுலாவாக நேற்றுமுன்தினம் மாலை, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தனர். அடிவாரத்தில் உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அனைவரும் வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளனர்.

நேற்று காலை, ஏழாவது மலையில் உள்ள ஈசனை தரிசித்துவிட்டு, கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.

மூன்றாவது மலையில் இறங்கிக்கொண்டிருக்கும்போது, விஷ்வா திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனிருந்தவர், விஷ்வாவை மீட்டு அடிவாரத்தில் உள்ள மருத்துவ மையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், விஷ்வா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.